யாழில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்ய மக்களின் உதவியை கோரும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைக்கு தொந்தரவு செய்யும் குற்றவாளிகளைக் கைது செய்ய ஆதரவை வழங்குமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய குடாநாட்டில் அதிகளவில் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் நேற்றையதினம் பொலிஸாரினால் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த வேண்டுமென அரசியல் வாதிகளும் பொது மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகன தொடரணியாக பல இடங்களுக்கும் சென்று இத்துண்டுப் பிரசுரங்களை வழங்கியுள்ளனர்.

பொலிஸ் அறிவித்தல் எனக் குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைக்கு தொந்தரவு செய்யும் குற்றவாளிகளைக் கைதுசெய்ய உங்கள் ஆதரவை வழங்குங்கள் என்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் 0766093030 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் அத்துண்டுப் பிரசுரத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor