குற்றவாளிக்கு தண்டப்பணம் 5 ரூபா!! பொலிஸார் மீது மக்களுக்க சந்தேகம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபா வரை தண்டம் அறவிடப்படும்.

எனினும், யாழ்ப்பாண பொலிஸாரால் 1866ஆம் ஆண்டு பொலிஸ் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால், குற்றவாளிகள் மூவரிடமும் தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் மூவரும் யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவருக்கும் நீதிமன்றில் தனித்தனியே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன் அவர்கள் மூவரும் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் மூவருக்கும் பொலிஸ் சட்டத்தின் அடிப்படையில் தலா 5 ரூபா தண்டப்பணம் விதித்து நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

எனினும் இது பொலிஸாரின் அசமந்தப் போக்கினால் இடம்பெற்ற ஒரு சம்பவம் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor