‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ இராணுவத்தின் அச்சுறுத்தலினால் திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்!!

இராணுவத்தினரின் அச்சுறுத்தலை தொடர்ந்து யாழ். நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் உடையில் வந்த இராணுவத்தினர், ‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ என கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர சபை ஊழியர்கள், அச்சத்தில் வேலையை கைவிட்டு திரும்பியவுடன், தாம் அங்கு பணியில் ஈடுபடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து யாழ். மாநகர சபையினர் வெளியாட்களை தற்காலிக வேலைக்கமர்த்தி வேலி அமைக்கும் பணிகளை பூரணப்படுத்தியுள்ளனர்.

தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் யாழ். மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் முதற்கட்டமாக நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor