விபத்துக்கள் அற்ற மாகாணத்தை உருவாக்கும் திட்டம் – பா.டெனீஸ்வரன் சூளுரை

எமது மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற ஒரு மாகாணமாக மாற்றவேண்டும் என வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எமது போக்குவரத்துச் சேவையினை பார்த்து ஏனைய மாகாணங்களும் பின்பற்ற வேண்டும் என்பது தனது இலட்சியங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது அமைச்சினூடாக நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “இரவு பகலாக பாடுபட்டு நியதிச்சட்டம் உருவாக்கி அதன் ஊடாக போக்குவரத்து அதிகார சபையை உருவாக்கியிருந்தேன். பிழை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு அந்தச்சட்டத்தில் இடமிருக்கின்றது.

அத்தோடு பல்வேறு மூலோபாய வேலை திட்டமும் செய்து வைத்திருந்தேன். அவையனைத்தும் தற்போது முதலமைச்சரின் கைகளில் உள்ளன. அனைத்தும் வெறுமனே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

வீதி விபத்தினால் எமது மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் ஒரு உயிரை இழந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

இவ்விடயத்துக்குப் பொறுப்பாகவிருக்கும் முதலமைச்சரும், அதிகாரிகளும் அர்ப்பணிப்போடு சேவை செய்ய முயற்சிசெய்ய வேண்டும். இல்லையேல் இன்னும் எத்தனையோ எமது உறவுகளை இழக்க நேரிடும். இவ்வாறு செய்ய முடியாவிட்டால் அமைச்சு பொறுப்பை தரவேண்டாம் தயவு செய்து ஒரு அனுமதியைத் தாருங்கள் இரவு பகலாக நின்று வேலை செய்து தருகிறேன்.

2015 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த 5 வயது சுவஸ்திகன் என்ற மாணவனின் மரணம் இன்னும் என் மனதில் ஆறாத வலியாகப் பதிந்துள்ளது. தயவு செய்து சிந்தித்துச் செயற்படுங்கள்” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor