யாழ் குருநகர் கொலை வழக்கில் இரண்டு இராணுவத்தினருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று, கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று(புதன்கிழமை) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலியில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஞானசிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவரை விசாரணைகளுக்காக அழைத்துச்சென்று அடித்து கொலை செய்ததாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் லெப்டினன்ட் கேர்ணல் ரொனி பெத்தலிஸ், மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் கேர்ணல் பியதாசகே பிரியந்த ராஜகருணா ஆகியோருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் குறித்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட இரண்டாவது எதிரியான மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் மூன்றாவது எதிரியான பியதாசகே பியந்த ராஜகருணா ஆகிய இராணுவத்தினருக்கே நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, எதிரிகளான இராணுவத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மேன் முறையீட்டு நீதிமன்றின் அனுமதியுடன் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கொலை செய்யப்பட்டவரின் உடலில் 21 இடங்களில் காயங்கள் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி வழக்கு விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த நபர் மாடியிலிருந்து வீழ்ந்து மரணித்ததாக இராணுவத் தரப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் இராணுவத்திற்கும் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இராணுவத்தினர் மன்றில் வாக்குமூலம் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor