பொதுப் போக்குவரத்தில் இராணுவ பேருந்துகள்!

ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் பேருந்துகள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவசர சேவையாக இச்சேவை இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வார அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து நேற்று மாலை முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பணிகளுக்கு வந்தவர்கள் மீண்டும் வீடுகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்ட நிலையில், கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் குவிந்திருந்த பயணிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் முப்படையினரின் பாதுகாப்பின் கீழ் கோட்டை ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பயணிகளின் நன்மை கருதி இராணுவத்தின் பாதுகாப்புடன் தூர இடங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சில நேற்றிரவு இயங்கின.

வெளிப்பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபட்ட ரயிலின் சாரதி ஒருவரை நேற்றிரவு சிலர் தடுத்து வைத்த நிலையில், பின்னர் அவர் மீட்கப்பட்டார்.

பயணிகள் எதிர்நோக்கும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு நேற்றிரவு நிதியமைச்சில் அவசர கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்ட போதும், எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை. இந்நிலையில், பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, ஓய்வுபெற்ற ரயில் சாரதிகளை கடமைக்கு திரும்புமாறு ரயில்வே திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளதோடு, வீதி அனுமதிப்பத்திரமின்றி இக்காலத்தில் பேருந்துகள் சேவையில் ஈடுபடலாம் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, ரயில் பயணச் சீட்டுக்கள் வைத்திருப்போர், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், தூர பிரதேங்களிலிருந்து பணிகளுக்குச் செல்வோர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், பணிப்புறக்கணிப்பை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: Editor