குள்ள மனிதர்களின் கொட்டத்தை அடக்க இரவு நேர ரோந்து!

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில், இளைஞர்கள் பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் அராலியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அராலி பகுதியில் கறுப்பு உடையணிந்து, குறுகிய தோற்றத்தில், பாய்ந்து செல்லும் ஆற்றலுடன் கூடிய சில மனிதர்கள் அண்மைய காலமாக வீடுகளுக்கு கல்லெறிதல், தீவைத்தல் போன்ற நாசகார செயற்பாட்டில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முனைப்பிலேயே இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குள்ள மனிதர்களின் அட்டகாசத்தால் நித்திரையின்றி அவதிப்படுவதாகவும், தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இச்சந்திப்பின்போது மக்கள் தெரிவித்தனர்.

எனவே இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்குமாறும் அப்பகுதியில் பொலிஸாரது ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்துமாறும் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்விசேட குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor