மாணவர்களுக்கு முடிவெட்டுவதில் கட்டுப்பாடுகள் அவசியம்!!!

பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பது மாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை, அவர்களது தலை முடிவெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளன. அதனால் மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில் பாடசாலைக்குச் சமூகம் அளிப்பது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தக்கூடிய தோற்றத் தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதுடன் அழகக அலங்கரிப்பாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்”

இவ்வாறு வடமாகாண அழகக அலங்கரிப்பாளர் சம்மேளனத்திடம் மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சால் அனுப்பிவைக்கப்பட்ட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு மாகாண கல்வி அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கு அழகக சங்கங்களின் சம்மேளத்தின் தலைவர் கதிரமலை நாகராசா, மாவட்ட தலைவர் ஆனந்தராசா உதயசங்கர் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் தலை முடி அலங்காரம் விரும்பத்தகாத முறைகளில் வெட்டப்படுவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

சந்திப்பின் பொழுது பின்வரும் வகையில் செயற்படுவதாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

• மாணவர்களின்,தலைமுடி கட்டை யாக வெட்டப்பட்டும் பின்புறம்“ப” வடிவத் தில் முறையாக வெட்டப்பட்டும் இருத்தல் வேண்டும்.

• சேட் கொலரிலிருந்து தலைமுடி 1 அங்குலத் திலும் (2.5சென்ரிமீற்றர்) கூடிய இடைவெளியில் இருத்தல் வேண்டும்.

• பக்கத் தோற்றம் “ப”வடிவத்தில் சீராக்கப்பட்டு காதுக்குமேல் இருக்கவேண்டும். அதன் கீழ் நீண்டிருக்க கூடாது.

• தலைமுடியின் நீளம் அரை அங்குலத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

• தலையில் வரிகள்,வடிவங்கள் ஏற்படுத்துதல் முற்றாக தடை செய்யப்படுகின்றது.

• பூசகர்கள் மற்றும் மத அனுஸ்டானங்களை நடத்துபவர்கள், அவர்களுக்குரிய சம்பிரதாய சிகை அலங்காரம் மேற்கொள்ளமுடியும் என்ற கட்டுப்பாடுகளுக்கு இணக்கம் காணப்பட்டது.

“பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் தலைமுடியை இடதுபக்கம் உச்சிபிரித்து ஒழுங்காக அழகாக சீவப்பட்டிருப்பதுடன், எண்ணெய் தவிர்ந்த ஏனைய திரவங்கள் (ஜெல்,சாயம்) பூசுவதும்,சென்ற் போன்ற செயற்கை வாசனைத் திரவியங்கள் பூசுவதை யும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்கள் ஆகியோரும் இவற்றைத் தவிர்த்து, முன்மாதிரியாக இருந்து, மாணவர்களின் தலை முடி வெட்டு மற்றும் சீருடைகளில் கூட்டுப் பொறுப்புடன் கவனம் செலுத்தவேண்டும்” என்று மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கேட்டுக் கொண்டார் – என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor