வட்டுக்கோட்டையை பதறவைத்த குள்ள மனிதர்கள்!- பீதியில் மக்கள்

வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசத்திற்கு மத்தியில், தற்போது அரங்கேறிவரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல்களால் யாழ். மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

யாழ். அராலி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய குள்ள மனிதர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வட்டுக்கோட்டையிலும் பொதுமக்களை அச்சுறுத்தி பெரும் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

இதனால் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் நேற்று கடும் பதற்றம் நிலவியதுடன், மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்று வீட்டின் கதவு, ஐன்னல் ஓரங்களில் மறைந்திருத்தும், வீடுகளின் கூரைகளின் மேல் ஏறியும், கல் வீச்சுத் தாக்குதல்களை நடத்தியும் அராலி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த குள்ள மனிதர்கள் தற்போது வட்டுக்கோட்டையிலும் தமது அட்டாசத்தை ஆரம்பித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை முதலியார் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் மீது குள்ள மனிதர்கள் சரமாரியாக கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது ஒருவர் ஓடிச் சென்று ஹயஸ் ரக வாகனத்தில் தப்பிச் செல்வதை அவதானித்துள்ளனர்.

இதேபோன்று அங்குள்ள ஏனைய சில வீடுகள் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நேற்றிரவு முழுவதும் குறித்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர், அப்பகுதியின் வீட்டிற்குள் உடமைகளை சேதப்படுத்தியதுடன், வீட்டிற்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor