பாதசாரிக்கடவையில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வாகனத்தில் ஏற்றிச்சென்ற பொலிஸார்!!!

வீதி ஒழுங்கு விதிமுறைகளுக்கு மீறியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை, வாகனம் ஒன்றில் போக்குவரத்துப் பொலிஸார் ஏற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இன்றையதினம் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவைகளில் வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடவும் வர்த்தக நிலையங்களுக்கு செல்வோரும் தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்வதால் குறித்த பகுதியில் போக்குவரத்து மிக பாதிக்கப்படுவது வழமை.

அத்துடன் அவ்வாறு கடவைகளில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதன் காரணமாக பாதசாரிகள் வீதிகளில் இறங்கி பயணிப்பதால் வாகனங்களில் செல்வோர் பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வந்த நிலையில் இன்றையதினம் குறித்த நடவடிக்கை பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் பாதசாரிகள் நடைபாதைகளை பயன்படுத்த முடியாத வகையில் தரித்து விடப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களை வாகனம் ஒன்றின் ஊடாக பொலிஸார் ஏற்றிச்சென்றுள்ளனர் என தெரியவருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் தனியார் போக்குவரத்து பேருந்து சங்கம் தமது இஸ்டங்களுக்கு பேருந்துகளை யாழ் மத்திய பகுதியில் குறிப்பாக மின்சார நிலைய வீதியில் கடைகளின் வாசல் பகுதிகளின் முன்பாக மக்கள் நடந்து செல்லவேண்டிய அதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்துவதனால் நடந்து செல்வோரும் பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த நடைபாதையை அவதானத்தில் கொண்ட யாழ்ப்பாணத்து பொலிஸார் ஏன் இதவரை தனியார் பேருந்துகளின் அடாவடித்தனங்களையும் மக்களுக்கு ஏற்படுத்தும் இடையூறுகளையும் அவதானத்தில் கொள்ளவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் மக்களது தேவைகளுக்காக என பல கோடி செலவில் அமைக்கப்பட்ட பிரதான வீதிகளை தனியார் பேருந்து தரிப்பிடமாக கொடுத்து மக்களை பல அவலங்களுக் குள்ளாக்குவதற்காக யாழ் மாநகர சபை தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அதிகளவான நிதியை வசூலிப்பதாகவும் இதனாலேயே யாழ் மாநகரசபை அப்பாவி வியாபாரிகளை கலைத்ததைப் போன்று இவர்களை கலைக்க முடியாது திண்டாடுவதாகவும் மக்களால் பரவலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor