இலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: முதலமைச்சர்

இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளதாக தான் கருதுவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஜெனீவாவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை சமர்ப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கை விவகாரம் தொடர்பான தென்னிந்திய கட்சிகளின் செல்வாக்கு குறித்து வினவியதற்கு, தமிழ் நாட்டின் கட்சிகளுக்குள்ளேயே நிறைய மோதல்கள் காணப்படுகின்ற நிலையில் இலங்கையின் பிரச்சினையில் தமிழ்நாடு தலையிடுவது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கையின் பிரச்சினை தொடர்பாக கவனம் கொண்டுள்ளமையால் இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்கள் குறையாது என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor