இலவச அம்புலன்ஸ் சேவை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட 1990 ‘சுகப்படுத்தும் சேவை’ இலவச அம்புலன்ஸ் சேவை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன.

பொலிஸ் – நீதி விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய சம்பவங்களுக்கு அம்புலன்ஸ சேவை வழங்கப்படும் போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அல்லது இருவர் கடமையில் அமர்ப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

வடக்கு உள்பட நாடுமுழுவதும் இலவச அம்புலன்ஸ் சேவையை வழங்க இந்திய அரசு 22.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இதுவரை வழங்கியுள்ளது.

இதில் முதல் கட்டமாக இந்திய அரசு வழங்கிய 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் தெற்கு மற்றும் மேல் மாகாணங்கள் உள்பல சில மாவட்டங்களில் இந்த சேவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுகப்படுத்தும் சேவை (சுவசெரிய) என்ற நிதியம் நாடாளுமன்றின் ஊடாக அமைக்கப்பட்டு அதனூடாக இலவச அம்புலன்ஸ் சேவையை அரசு முன்னெடுக்கிறது.

சுவசெரிய நிதியத்துக்கு இரண்டாவது கட்டமாக இந்திய அரசால் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்பட்டது.

அதன் ஊடாக வடக்கு, ஊவா மாகாணங்களுக்கான சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைகப்பபட்டது.

வடக்கு மாகாணத்துக்கு 21 அம்புலன்ஸ் வண்டிகளும் ஊவா மாகாணத்துக்கு 34 அம்புலன்ஸ் வண்டிகளும் வழங்கப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்த இந்த நிகழ்வில் புதுடில்லியில் இருந்தவாறே நேரலை காணொலி தொழிநுட்பம் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட்ட 21 அம்புலன்ஸ் வண்டிகளில் 20 வண்டிகள் பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஒன்று மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 7 அம்புலனஸ் வண்டிகளும் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, வட்டுக்கோட்டை, சுன்னாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிகப்பட்டுள்ளன.

“1990 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவித்தால் அந்த தகவல் அம்புலன்ஸ் பைலட் (சாரதி), அவசர மருத்துவ தொழிநுட்பவியலாளர் ஆகியோருக்கு வழங்கப்படும். அத்துடன் பொலிஸ் தலைமையகம் ஊடாக அந்த தகவல் உரிய பகுதி பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்படும்.

பொலிஸ் – நீதி விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய குற்றச்செயல்கள், விபத்து போன்றவை ஏற்பட்டு அம்புலன்ஸ் சேவை தேவைப்படின் வண்டியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அல்லது இருவர் சேர்ந்து பயணிப்பர்.

ஏனையவற்றுக்கு உரிய தகவலைப் பதிவு செய்து பைலட் மற்றும் அவசர மருத்துவ தொழிநுட்பவியலாளர் மட்டுமே பயணிப்பர்” என்று சுவசெரிய நிதியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் ஊடாக புதிததாக ஆயிரத்து 500 இளையோருக்கு இதுவரை தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் அவசர மருத்துவ தொழிநுட்பவியலாளர்கள் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் பயிற்சியை முடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor