பேராயர் டானியல் தியாகராஜா ஒதுங்கும்வரை யாழ்ப்பாணக் கல்லூரிக்கான நிதி கிடையாது!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குத் தொடர்ந்தும் நிதி வழங்குவதற்கு அமெரிக்காவில் இருக்கும் தர்மகர்த்தா சபையினர் முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துக் கடிதம் ஒன்றினை நேற்று இலங்கையில் இருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபைக்கு அனுப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையிலும் கல்லூரியின் நிருவாகத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் நோக்கில் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜாவும், சபையின் உப தலைவரான சட்டத்தரணி செல்வி விஜுலா அருளானந்தமும் பதவி விலகவேண்டும் என்று அந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

“பாடசாலையின் பங்குதாரர்களாக அமையும் அனைத்துத் தரப்பினரதும், குறிப்பாகப் பழைய மாணவர்களினது உள்ளீடுகளையும் பெற்று சுயாதீனமான, எந்தப் புரட்டத்தாந்துத் திருச்சபையினரும் பெரும்பான்மை பலம் பெறாத வகையிலும், கூடுதலான வெளிப்படைத்தன்மை மிக்கதுமான‌ ஒரு ஆளுநர் சபை உருவாக்கத்துக்கான யாப்பினைத் தயாரிக்க வேண்டும்” என்று யாழ்ப்பாணக் கல்லூரியின் ய தர்மகர்த்தா சபை பரிந்துரைத்துள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதி வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தர்மகர்த்தா சபையின் கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாடசாலையின் நடவடிக்கைகளிலே வெளிப்படைத் தன்மை பேணப்படல் வேண்டும். குறிப்பாக பாடசாலையின் நிதிப் பரிபாலனம் தொடர்பான விடயங்களிலே எல்லாத் தகவல்களையும் பெறுவதற்குத் தர்மகர்த்தா சபைக்கு வரையற்ற சுதந்திரம் இருக்க வேண்டும்.

பாடசாலையின் அதிபர் சுயாதீனத்தன்மை மிக்கவராகவும், ஆற்றல் மிக்கவராகவும் இருக்க வேண்டும். பாடசாலையின் முகாமையாளர் அதிபருக்குப் பொறுப்புச் சொல்வதற்குக் கடமைப்பட்டவராக இருக்க வேண்டும் அல்லது முகாமையாளர் பதவி முற்றாக ஒழிக்கப்படல் வேண்டும் (தற்போது ஆளுநர் சபையின் தலைவராகவும், முகாமையாளராகவும் பேராயர் தியாகராஜா அவர்களே இருக்கிறார்).

பாடசாலையின் ஆளுநர் சபையில் பெற்றோர், தொழில்சார் கல்வியியலாளர்கள், வெளியிலிருந்தான கல்வியலாளர்கள், பழைய மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றும் வகையில் ஆளுநர் சபையின் தலைவரும், உபதலைவரும் பதவி விலகி புதிய யாப்புருவாக்க முயற்சிகள் தொடங்கும் வரை 2018ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டில் 20% நிதி வெட்டும், நான்காம் காலாண்டில் 50% நிதி வெட்டும், 2019இன் ஆரம்பத்தில் இருந்து 100% நிதி வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும் – என்றுள்ளது.

பாடசாலையில் நிகழும் முறைகேடுகள் குறித்தும் தர்மகர்த்தா சபையினரின் தமது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக பாடசாலையிலே கல்வி கற்கும் மாணவர்களுக்கு அச்சுறுத்தலுக்கு (உடல் ரீதியான அச்சுறுத்தல்கள் உள்ளடங்கலாக) உள்ளாகும் சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

2017 ஒக்டோபர் மாதத்திலே யாழ்ப்பாணக் கல்லூரியில் இருந்து வரலாற்று ரீதியாகப் பயன்பெற்ற சமூகங்களைச் சேர்ந்த வட்டுக்கோட்டையினையும் அதனது அயற் கிராமங்களையும் சேர்ந்த 200 பொது மக்கள் பாடசாலையில் நிலவும் மீறல்கள், ஒழுங்கீனங்கள், ஊழல்கள் குறித்து தாம் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றினை அமெரிக்காவில் இருக்கும் தர்மகர்த்தா சபையினருக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பழைய மாணவர்கள் பலர் கையொப்பமிட்டு இதே விடயங்கள் தொடர்பாக ஓர் அறிக்கையினைப் பகிரங்கமாக வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையின் உப தலைவரான சட்டத்தரணி செல்வி விஜுலா அருளானந்தம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் இணை சட்டத்தரணிகளில் ஒருவராவார்.

தர்மகர்த்தா சபையினரால் ஆளுநர் சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தினை இங்கே பார்க்கலாம்.

Recommended For You

About the Author: Editor