யாழ்.தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம், கொக்குவில் தொழிநுட்ப கல்லூரியின் பதிவாளர் அதிகார முறைகேட்டில் ஈடுபடுகின்றார் என்றும் அதற்கு பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டி மாணவர்கள் ஒன்றியத்தால் நேற்று கற்றல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

தொழிநுட்ப கல்லூரியின் பெண் பதிவாளரின் சகோதரர் பொலிஸில் பணியாற்றுகிறார் என்றும் அவரின் வழிநடத்தலில் யாழ்ப்பாணம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் யாழ்ப்பாணம் தொழிநுட்ப கல்லூரி கல்விசார் உத்தியோகத்தர்களை மிரட்டுகின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் நீண்ட நாள்களாக உள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் தொழிநுட்ப கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தால் நேற்று (20) வெள்ளிக்கிழமை சில மணி நேர கற்றல் புறக்கணிப்புப் போராட்டம் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

மாணவர் ஒன்றியத்தின் பணம் எங்கே? அதிகார முறைகேட்டில் ஈடுபடும் பதிவாளர் எமக்கு வேண்டாம் உள்ளிட்ட சுலோகங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதளவேளை, பதிவாளரின் மிரட்டலுக்குள்ளாகி பாதிப்படைந்த கல்விசார் உத்தியோகத்தர்கள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

Recommended For You

About the Author: Editor