வடக்கில் இந்தியாவின் அவசர அம்புலன்ஸ் சேவை ஆரம்பம்!

இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் வடக்கில் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

குறித்த சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தவகையில் வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளது. இதில் யாழ்ப்பாணத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களுக்கும் தலா 3 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் குணசீலன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவசர அம்புலன்ஸ் வண்டி உதவி தேவைப்படுபவர்கள், ‘1990’ (suwafariya) சுபாஸ் அரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நோயாளர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியும்” எனவும் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த செயல் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை வடக்கு சுகாதார அமைச்சில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுபாஸ்அரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவையை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்தினர், வடமாகாணத்தில் உள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்,வட மாகாணத்திலுள்ள பொது வைத்தியசாலைகளின் இயக்குனர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor