சுழிபுரம் சிறுமி படுகொலை: மேலும் இருவர் சிக்கினர்!

மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையிடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கிய பிரதான சந்தேகநபர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஏனைய சந்தேகநபர்கள் ஐந்து பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர், கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். பிரதான சந்தேகநபரும் மற்றொருவரும் சிறுமியை பற்றைக்குள் அழைத்துச் சென்றதை அவர்கள் கண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பாடசாலையில் தரம் 2இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் சாட்சியாக இணைக்கப்படவுள்ளார். அந்த மாணவியிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

சம்பவ தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

“தேடப்பட்டு வந்த சந்தேகநபர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என நம்பப்படும் நபர் ஒருவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் சிறுமியின் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

Recommended For You

About the Author: Editor