மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்!!

மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் இன்று காலை புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல், வாள்வெட்டு என பெரும் அட்மூழியத்தில் ஈடுபட்டு தப்பித்துள்ளது.

வாள்வெட்டுக் கும்பலால் அந்த வீட்டின் மீது நடத்தப்படும் இரண்டாவது பெரும் தாக்குதல் இதுவாகும்.

“10 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வந்தது. வீட்டுக்குள் புகுந்த கும்பல், பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டது. அதனால் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களை அடித்து நொருக்கியது. கதவைக் கொத்திச் சேதப்படுத்தியது. வீட்டின் குடும்பத்தலைவருக்கு வாளால் வெட்டியதால், அவரது வயிறுப் பகுதியில் வெட்டு விழுந்தது.

வீட்டின் தளபாடங்களை நொருக்கிய கும்பல் நீண்ட நேர அட்டூழியத்தை அரங்கேற்றி அங்கிருந்து வாள்களுடன் பகல்வேளையில் அச்சமின்றி வீதியால் சென்றது” என்று சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்தார்.

அந்த வீட்டை இலக்கு வைத்து நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்னரும் வீடு புகுந்த கும்பல், அந்த குடும்பத்தின் மாணவியின் புத்தகங்களை தீயிட்டு பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்திருந்தது.

அந்த குடும்பத்தலைவரின் மகன், ஆவா குழுவைச் சேர்ந்தவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதைப் பழிதீர்க்கும் வகையிலேயே இவ்வாறு அந்தக் குடும்பத்தை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதில் தாமம் ஏற்பட, வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்து தப்பித்தது.

Recommended For You

About the Author: Editor