இளைஞர்கள் விழிப்படைந்தால் குற்றச்செயல்களை முற்றாக கட்டுப்படுத்த முடியும்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத் தக்கது. இளைஞர்கள் விழிப்படைந்தால் குற்றச்செயல்களை முற்றாக கட்டுப்படுத்த முடியும்”

இவ்வாறு வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்தார்.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் இளைஞர்களின் நடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைக்கவில்லையாயின் தனது கவனத்துக்கு கொண்டு வருமாறும் அவர் கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள், போதைப் பொருள் விற்பனை – கடத்தல் சம்பவங்கள் உள்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வந்தன.

அவற்றை கட்டுப்படுத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் வந்துள்ளமை அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்களை வைத்து காணக்கூடியதாக உள்ளது.

மாவா போதைப் பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவம் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோரையும் தற்போது இளைஞர்கள் துரத்திச் சென்று பிடிக்கின்றனர்.

இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு வரவேற்கத் தக்கது. குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொலிஸாரால் மட்டும் முடியாது.

பொது மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்திலேயே குற்றச்செயல்களை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும்.

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டோ அல்லது அவர்களைப் பிடித்துக் கொடுத்த பின்னரோ பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் 0777306976 என்ற எனது அலைபேசிக்கு அறியத்தாருங்கள்” என்று மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor