காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து இந்துமத விவகார விடயதானத்தை நீக்கக் கோரி சுவாமிநாதன் அமைச்சரவைக்கு கடிதம்?

நேற்று பிரதி அமைச்சராக பதவியேற்ற காதர் மஸ்தானின் அமைச்சு விடயதானங்களிலிருந்து இந்து விவகார பிரிவை நீக்குமாறு தாம் அமைச்சரவையை கோரவிருப்பதாக இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இரண்டு ராஜாங்க அமைச்சர்களும், 5 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இதன்படி, அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் மீள்குடியேற்றத்துறை, புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி ஆகிய விடயதானங்களுடன் இந்துமத விவகார விடயதானத்துக்கான பிரதி அமைச்சராகவும் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டார்.

இந்து விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் வட மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இது சம்பந்தமாக தனியார் செய்திச் சேவை ஒன்று, இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் கேட்டபோது,

இது அமைச்சரவை விடயதானங்களை பகிரும்போது இடம்பெற்ற சாதாரண விடயம் எனவும், இதற்கு முன்னரும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இந்துமத விவகார ராஜாங்க அமைச்சராக இருந்தார் எனவும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் இந்துமத மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அமையும் என்பதால், அவரது பொறுப்பிலிருந்து இந்துமத விவகார விடயதானத்தை நீக்கக் கோரி அமைச்சரவைக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறினார்.

Recommended For You

About the Author: Editor