மீனவர் போராட்டத்தில் கூட்டமைப்பு, முன்னணியினர் இடையே வாய்த்தர்க்கம்!!

கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க, அதனை அவதானித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொந்தளித்தனர்.

இதனால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் உரிமைப் போராட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

வடமராட்சி கிழக்கில் கடலட்டை தொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி, யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.கஜேந்திரனிடம் செய்தியாளர்கள் செவ்வி எடுத்தனர்.

“கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர்” என செல்வராசா கஜேந்திரன் அதன்போது குறிப்பிட்டார்.

அதனை அவதானித்த கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பன்னீர்செல்வம் குழப்பமடைந்து, “2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நீங்கள் அதைத் தானே செய்தீர்கள்” என்று கஜேந்திரனிடம் கேட்டார்.

அதனால் அங்கு கூட்டமைப்பினருக்கும் முன்னணியினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

எனினும் போராட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் இந்த குழப்பநிலையில் தலையிடாமல் இருந்தனர். சிறிது நேரத்தில் குழப்பநிலை தணிந்தது

Recommended For You

About the Author: Editor