கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் – ஒருவர் கைது

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கொக்குவில் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினார்.

“கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), நேற்று புதன்கிழமை மாலை பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றே அவர் மீது தாக்குதலை மேற்ககொண்டது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஏனைய 4 பேரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை முடிக்கிவிடப்பட்டுள்ளது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு ஆசிரியராக அவர் உள்ளமையால், போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட காரணங்களால் சில மாணவர்களை பாடசாலையிலிருந்து விலக்க அல்லது இடைநிறுத்த காரணமாக அமைந்துள்ளார். அதன் பின்னணியிலேயே ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor