தென்பகுதி மீனவர்களை வெளியேற்றமுடியாதெனில் நாங்கள் வெளியேற்றுவோம் – வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை!

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என்று வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கூறியுள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி நேற்று (புதன்கிழமை) வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலிலேயே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் மேற்படி குற்றச்சாட்டையும் எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளார்கள்.

அத்துடன் தாங்களும் ஒரு தீர்வைப் பெற்றுத்தராமல் எங்களையும் விடாமல் மக்களே போராடுங்கள் எனக் கூறினால் அரசியல்வாதிகள் எதற்காக இருக்கிறார்கள்? அவர்களால் என்ன பயன்? எனக் கேள்வியெழுப்பினார்கள்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சருடன் பேசித் தீர்வு கூறப்படும் எனக் கூறப்பட்டது. அதற்கு என்ன நடந்தது? எனக் கேட்டனர்.

அத்துடன் கடற்றொழிலாளர்கள் அட்டை பிடித்தல், சுருக்குவலை பயன்படுத்துதல், றோலர் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழில் செய்தல் போன்றன சட்டத்திற்கு மாறான கடற்றொழில் முறைகளை மெற்கொள்கின்றனர். அந்தச் சட்டவிரோதத் தொழில்களை தடைசெய்யவிடாது தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தென்பகுதி மீனவர்களுக்கு கால அவகாசத்தை வழங்காமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையேல் அதனை அவர்கள் வெளிப்படையாக கூறவேண்டும் என்று மேலும் குறிப்பிட்டனர்.

இதன்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் குறித்த சபையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor