கேபிள் ரீவி இணைப்பு முகவர் கைது!

கரவெட்டி, கரணவாய் கிழக்கில் கேபிள் ரீவி இணைப்பு வயரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதிக்கு கேபிள் ரீவி இணைப்பை வழங்கும் முகவர் நெல்லியடிப் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

“கேபிள் ரீவி இணைப்பு வயரைத் தொடுத்திருந்த இரும்புக் கம்பியின் ஊடாகவே மின்சார சபையின் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர். சம்பவத்தையடுத்து கேபிள் ரீவி இணைப்பை வழங்கும் முகவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேபிள் ரீவி இணைப்பு முகவரான கரணவாயைச் சேர்ந்தவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கரவெட்டி, கரணவாய் கிழக்கில் கடந்த 23ஆம் திகதி காலை கேபிள் ரீவி இணைப்பு வயரை கையாண்ட போது மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்தனர். மற்றொரு மகன் காயமடைந்தார்.

யாழ்ப்பாணம் நகரில் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகனாந்தன் (வயது- 50), சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor