பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போன்ற ஜனாதிபதி இலங்கை யுத்த காலத்தில் பதவியில் இருந்திருந்தால், பிரபாகரன் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

தற்போது உள்ளதைப் போன்ற அரசாங்கத்தை இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் கண்டதில்லை. ஊழல்களும், திருட்டுகளும் நிறைந்து வழியும் அரசாங்கமே தற்போது உள்ளது.

தமிழ்மக்களின் ஆதரவினால் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் ரணிலை பிரதமராக்கினார். அதன் பின்னர் முழுக்கட்டுப்பாடுகளும் பிரதமர் கைகளுக்கு சென்று விட்டது. இப்போதுபிரதமரை மாற்ற முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துகளின் மூலம் அவரின் எதிர்காலம் தெளிவாக தெரிகின்றது. ஜனாதிபதி தற்போது இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் என்ன நடக்கும் என்பதே அவருக்கு தெரியவில்லை.

மைத்திரி தனிமைப்படுத்தப்படவுள்ளார். அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதை புரிந்து கொண்டுள்ள அவர், என்னால் எதுவும் முடியாது எனக்கூறிக்கொண்டு அழுது அழுது முழுநாட்டையும் சுற்றி வந்து கொண்டிருக்கின்றார்.

எவ்வாறாயினும் நாட்டுக்கு முறையான தலைமைத்துவம் அவசியம், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தீர்க்கமான முடிவுகள் அவசியம். இந்த நிலையில் கோட்டாபய அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்ற கருத்து அதிகமானோரிடம் காணப்படுகின்றது இந்த விடயம் குறித்தும் நாம் ஆலோசனைகளைச் செய்துவருகின்றோம் எனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor