வடமராட்சியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளிலிருந்து யாழிற்கு வருகைதந்து வாடிகளை அமைத்து கடலட்டை பிடிப்பவர்களுக்கு எதிராக வடமராட்சி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மருதங்கேணி பிதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளருடனான சந்திப்பில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியவர்களுக்கே தொலைபேசி மூலம் புலனாய்வாளர்களால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் வெள்ளை வானில் கடத்தப்படுவீர்கள் என்றும், 4 ஆம் மாடி பார்க்க ஆசையாக உள்ளதா? என்றும் கேட்டு அவர்கள் மிரட்டியதாக குறித்த மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனைக் கேட்டறிந்த பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்தார்.

இதனிடையே தவறும் பட்சத்தில் எதிர்வரும் 1 ஆம் திகதி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் கலந்துரையாடலில் முடிவுகள் எடுக்கப்படுமென்றும் அடுத்து மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படுமெனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor