பிரதி சபாநாயகராகிறார் அங்கஜன் ராமநாதன்!

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைகளைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உள்ளடங்கலாக 16 பேர் பதவி விலகியிருந்தனர். நல்லாட்சியில் பிரதி சபாநாயகர் பதவியை வகித்துவந்த திலங்க சுமதிபாலவும் இவர்களுள் ஒருவர்.

இந்நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு வேறொருவரை நியமிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினர் கோரியிருந்த போதும், திலங்க சுமதிபாலவே அப்பதவியில் நீடிக்க வேண்டுமென கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்த்தரப்பில் அமர்ந்த சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாதிட்டனர்.

எனினும், திலங்கவின் பதவி விலகல் தொடர்பாக தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையென கடந்த அமர்வில் சபாநாயகர் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது அப்பதவிக்கு அங்கஜனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor