ஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்

நீர்வேலி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தினுள் வைத்து வாள்வெட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை.

குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் தாக்குதலுக்கு இலக்கான இரு சாட்சிகளும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை. தம் மீது தாக்குதல் நடத்தும் போது தாக்குதலாளிகள் முகத்தினை மறைத்து கறுப்பு துணி கட்டி இருந்தமையால் , தாக்குதலாளிகளை அடையாளம் காணமுடியவில்லை என சாட்சியங்கள் மன்றில் தெரிவித்தனர்.

அதை அடுத்து குறித்த வழக்கினை எதிர்வரும் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் சந்தேக நபர்கள் மூவரையும் அன்றைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிடுத்தார்.

மேலும், நீர்வேலி வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor