முகநூல் பதிவு தொடர்பில் பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி. தெற்கு பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் வேலாயுதம் செல்வகாந்தன் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வேட்பாளர் விளையாட்டுக் கழகமொன்றின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். இவ்விளையாட்டுக்கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக புலம்பெயர் நலன்விரும்பிகளால் ஒரு தொகைப் பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும் விளையாட்டுக்கழகத்தின் மற்றைய நிர்வாகியொருவர் விதிகளை மீறி தன்னிச்சையாக வாழ்வாதார உதவி என்ற பெயரில் மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார்.

இதையடுத்து செல்வகாந்தன் குறித்த விடயத்தை முகநூலில் பதிவு செய்து புலம்பெயர் நலன்விரும்பிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்றைய நிர்வாகி உள்ளிட்ட குழுவினர் அவரது வீட்டுக்குச் சென்று செல்வகாந்தனை தாக்க முற்பட்டுள்ளார். இதன்போது அயலவர்கள் அதனைத் தடுத்தமையால் தாக்குதல் நடத்த வந்தவர்கள் திரும்பிச்சென்றுள்ளனர்.

அச்சுறுத்தியவர்கள் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor