கிளிநொச்சி மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று நேற்று (புதன்கிழமை) முன்னெடு்கப்பட்டது.

குறித்த போராட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கூடிய பிரதேச மக்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபைக்கு சென்று அங்கு கவனயீஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரதேச சபைத் தவிசாளரிடம் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர். அத்துடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சென்ற மக்கள் அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

குறித்த பிரதேசத்தில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றை திறப்பதற்கு பல முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவ்விடயம் தொடர்பில் பல்வேறு போராட்டங்களும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்பப்பட்டபோதிலும் எதுவித பலனும் கிடைக்கவில்லை. குறித்த விற்பனை நிலையம் அமைக்கப்படும் பகுதியியை அண்மித்து பாடசாலை காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

மேலும் எமது பிரதேசத்தில் அமைக்கப்படும் விற்பனை நிலையத்தினால் எமது பிள்ளைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பின்றி வாழவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor