காணாமல்போனோர் விவகாரத்திற்கு சர்வதேச வழக்கின் மூலம் தீர்வு – ஜஸ்மின் சூக்கா

காணாமல்போனோர் விடயத்தை இலங்கை தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்வதன் மூலம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் ஜஸ்மின் சூக்கா மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல்போனோர் அலுவலகம் தனது விசாரணைகளை ஆரம்பிக்கும்போது இவர்களின் நிலைப்பாடு குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டும் என நாம் காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளோம்.

அத்துடன் காணாமல்போனோரின் உறவுகளின் சாட்சியங்களை நாம் பெறும்போது அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வேறு வழியில்லாமல் இராணுவத்திடம் சரணடைந்த 280 பேரின் பெயர்களும் புகைப்படங்களும் அவர்கள் தொடர்பான விபரங்களும் ITJP என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் காணாமல்போனோரின் விடையத்தில் புறக்கணிப்புப் போக்கினைக் கொண்டிருக்குமானால் சர்வதேச ரீதியில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்து இவ்விடையத்திற்குத் தீர்வு காணப்படும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: editor