வடக்கில் அரச வைத்தியசாலைகள் முடங்கும் அபாயம்!

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்திய சாலைகளின் மருத்துவ அதிகாரிகள் சங்கம், 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி அவர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல், குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் (புதிய சுற்று நிருபத்தின் படி) கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாததற்கு, உரிய தீர்வு வேண்டுமென கோரியே அவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இது தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சர், மற்றும் வட மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோர், வழங்கிய கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதியுடன் முடிவடைவதனால், எதுவித நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்தில் திட்டமிட்டபடி பணி புறக்கணிப்பு நடைபெறும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நோயாளிகளிற்கு ஏற்படும் சிரமங்களிற்கு சுகாதார அமைச்சு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும், அத்தினத்தில் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பணிப் புறக்கணிப்புக்கு உரிய பதில் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் இப்போராட்டம் விஸ்தரிக்கப்படும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor