வடக்கு கல்வி அமைச்சின் செயலாளராக சத்தியசீலன் நியமனம்

வடக்கு கல்வி அமைச்சின் செயலாளராக எஸ்.சத்தியசீலனும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரனும் நியமிக்கப்பட்டனர்.வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயால் இன்று (5) இந்த மாற்றங்கள் வழங்கப்பட்டன.

இதன்மூலம் வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனத்திலிருந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்தது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமை வகித்த எஸ்.சத்தியசீலன், தற்போது மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார். மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக அவர் முன்னரும் பதவி வகித்திருந்தார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த ரவீந்திரன் மத்திய அரசின் அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுச் சென்றார். அதனால் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பதவியில் வெற்றிடமேற்பட்டது.

வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயும் பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான கலாநிதி க.சர்வேஸ்வரனும்ம் கடந்த 19ஆம் திகதி சந்தித்தனர்.

இதன்போது, மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகனதாஸ் மாற்றப்படுவதுடன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாகவிருக்கும் சிவபாதசுந்தரம், மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராகவும் பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாக தெய்வேந்திரன் நியமிக்கப்படுவார் என்று ஆளுநரால் பதில் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நியமனத்தை ஏற்க மறுத்த பதில் முதலமைச்சர், தம்மால் பரிந்துரைக்கப்படுபவர்களை மட்டுமே செயலாளர்களாக நியமிக்க முடியும் என முரண்பட்டார். அத்துடன், அப்போது இந்தியாவில் இருக்கும் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு இந்த நியமனங்கள் தொடர்பில் சர்வேஸ்வரன் பேசினார்.

கல்வி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரன் நியமிக்கப்படாவிடின், அனைத்து நியமனங்களையும் உடன் நிறுத்துமாறு முதலமைச்சர் தொலைபேசியிலேயே கேட்டுக்கொண்டார். அதனையடுத்து ஆளுநரால் அன்றைய தினம் வழங்கப்படவிருந்த செயலாளர் மாற்றலை நிறுத்திவைக்குமாறு பதில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அதனால் மாற்றல் கடிதங்களை வழங்குவதை ஆளுநர் பிற்போட்டிருந்தார்.

இதேவேளை, தெய்வேந்திரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து ஆளுநரின் பணிப்பில் அவர் அதிகாரங்கள் அற்ற பதவி நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor