வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்!

சமுர்த்தி அமைச்சினால் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலகங்களில் பெரும்பான்மையின இளைஞர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கும் செயலானது தமிழ் மக்களை மலினப்படுத்தும் செயலாகும் என அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

இந்த நியமனம் குறித்து நேற்றயதினம் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘வடகிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும் எத்தனையோ இளைஞர், யுவதிகள் கல்வித் தகமையுடன் எந்தவிதமான தொழில்வாய்ப்புக்களும் இன்றி இருக்கின்றனர். அதே நல்லாட்சி அரசாங்கமானது மிகவும் மோசமான ஒரு செயற்பாட்டை செய்திருப்பதானது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அதிர்ப்தி நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் 20க்கும் மேற்பட்ட சிங்கள தென்பகுதி இளைஞர்கள் தமிழர் தாயகப்பிரதேசமான வடகிழக்கு பகுதிகளில் அரச நியமனங்களை பெற்று தமது கடமைகளை பொறுப்பேற்க வந்திருக்கின்றார்கள். இவர்களுக்கு நியமனங்ளை வழங்கவேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் அவர்களுக்கான நியமனங்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளில் வழங்கிவிட்டு எமது வடகிழக்கு பிரதேசத்தில் தமிழ் இளைஞர்களை நியமிக்க வேண்டும் எனபதுதான் எமது கோரிக்கை.

கடந்த கால யுத்த சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு எமது குடும்ப வறுமையின் பிடியில் இருந்து கொண்டு தங்களது கல்வியை தொர்ந்த வடகிழக்கில் வசிக்கும் எத்தனையோ தமிழ் இளைஞர், யுவதிகள் இன்று வரைக்கும் கல்வி சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளில் முடங்கிக்கிடக்கின்றனர்.

தென்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்குவதென்பது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதனை தமிழ் பேசும் மக்களால் அரியாசனத்திற்கு கொண்டுவரப்பட்ட நல்லாட்சி அரசு ஒருகணம் சிந்திக்கவேண்டும்.

இது தொடர்பாக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் மௌனம் காக்காமல் உரிய நடவடிக்கைகளை எடுத்து எமது பிரதேச இளைஞர்களின் தொழில்வாய்ப்பிற்கு உதவ குரல் கொடுக்க வேண்டும்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor