வடக்கு அமைச்சர்கள் மீதான மோசடிக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஆளுநர் உத்தரவு

வடக்கு மாகாண அமைச்சரவை மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வடக்கு மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டை உள்ளூர் பத்திரிகை ஒன்று அண்மையில் வெளியிட்டது.

அத்துடன் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணையைக் கோருவது என மாகாண சபை உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளிக்கும் போது ஆளுநர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“மாகாண அமைச்சர்கள் மீதான மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதம செயலாளருக்குப் பணித்துள்ளேன். அந்த அமைச்சர்கள் தொடர்பில் தற்போது எதுவுமே கூற முடியாது. விசாரணையின் பின்னரே எந்த முடிவுக்கும் வர முடியும்” என்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் முதலாவது அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் இருவர் மீது மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவர்கள் இருவரும் பதவி விலகி ஒரு ஆண்டுகள் நிறைவடைய முன்னர் புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor