மீள்குடியேறும் மக்களுக்கு வலி,வடக்கு பிரதேசசபை உதவி!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள பகுதி கிணறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும், பற்றைகளை துப்புரவு செய்து வீதிகளை அமைக்கும் பணிகளையும், மீள்குடியேறிவரும் மக்களுக்கான குடிநீர் வசதிகளையும் வலி,வடக்கு பிரதேச சபை செய்து வருவதாக பிரதேச சபையின் தலைவர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார்.

கடந்த 13ம் திகதி வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த சுமார் 683 ஏக்கர் நிலம் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டது. மேற்படி பகுதி கடந்த 28 வருடங்களாக மக்கள் பயன்பாட்டில் இல்லாமையினால் கிணறுகள் தூர்ந்துபோய், பாதைகள் பற்றைகளால் மூடப்பட்டு காணப்படுகின்றது.

இது குறித்து தகவல் தருகையிலேயே வலிகாமம் வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

14 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த 315 குடும்பங்களினதும், உறவினர், நண்பர்கள் வீடுகளில் வாழ்ந்த 650 குடும்பங்களினதும் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளுக்கு செல்வதற்கான வீதிகள் பற்றைகளால் மூடப்பட்டிருக்கும் நிலையில் அந்த பாதைகளை புனரமைத்து மக்கள் சுமுகமாக மீள்குடியேறுவதற்கான பணிகளை வலிகாமம் வடக்கு பிரதேச சபை செய்து வருகின்றது. மேலும் மக்களுடைய பயன்பாட்டில் இல்லாமையினால் கிணறுகள் அனைத்தும் தூர்ந்துபோயும், குப்பைகள் நிரம்பியும் காணப்படுகின்றது.

இதனால் மீள்குடியேறும் மக்களுடைய குடிநீர் தேவைக்காக கிணறுகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையினை வலிகாமம் வடக்கு பிரதேச சபை செய்து வருகின்றது. அதேபோல் அவசரமாக குடிநீர் தேவைப்படும் இடங்களில் குடிநீரையும் வழங்கிவருகிறோம். மேலும் கடந்த 28 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த மக்கள் அங்கிருந்து சொந்த நிலத்தில் மீள்குடியேறும்போது அவர்களுடையபொருட்களை கொண்டுவர முடியாத நிலை காணப்பட்டால் அதனையும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை செய்து கொடுக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor