அரசாங்கத்தில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை! – யாழில் அமைச்சர் மனோ

“அரசுடன் உடன்படிக்கை செய்வதில் நம்பிக்கையில்லை. காரணம் அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசில் கௌதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது” இவ்வாறு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர் மனோ, யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்திருந்தது. அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரமே கூட்டமைப்பு பிரதமரை ஆதரித்ததாக தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த மனோ, கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், அதில் கூட்டமைப்பு ஏற்கனவே குறிப்பிட்ட விடயங்களையே மீளவும் நினைவுறுத்தியதாகவும் மனோ சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, அரசுடனான உடன்படிக்கைகளில் தமக்கு நம்பிக்கையில்லையெனக் குறிப்பிட்ட மனோ, தமது கூட்டணியும் அரசுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்யவில்லையெனக் கூறியுள்ளார்.

இதுவரை செய்யப்பட்ட உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றும், அவற்றை நிறைவேற்ற அரசாங்கத்தில் கௌதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லையென்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor