கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் கொழும்பில் மாயம்!

கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 46 வயதுடைய வேலாயுதம் விக்கினேஸ்வரன் என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் அவர் பணியாற்றுவதுடன், புத்தாண்டை முன்னிட்டு கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் வீடு திரும்பவுள்ளதாக அவர் தனது மனைவியிடம் தொலைபேசியில் கதைத்துள்ளார்.

அதன்பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை என்பதுடன் அவரது தொலைபேசியும் செயலிழந்துள்ளது. கணவர் இரண்டு நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளாது வீட்டிற்கும் திரும்பவுமில்லை என்ற நிலையிலேயே அவரது மனைவி கடந்த சனிக்கிழமை அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் குடும்பத்தலைவர் பணியாற்றும் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது, 11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை என பதில் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் ஊடாகச் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அக்கராயன் பொலிஸார் தெரிவித்ததாக காணாமல்போன குடும்பத்தலைவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor