ரணிலின் திடீர் முடிவு! – பரபரப்படையும் தென்னிலங்கை

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

ரணிலுக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் மூலமாகவே குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.

தயாசிறி ஜயசேகர, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷமன் யாபா அபேவர்தன உட்பட சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

எனினும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ரணிலுக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், அதில் ஐக்கியதேசிய கட்சி, சுதந்திரக்கட்சி ஆகிய இருசாரரும் அடங்குவதாகவும் ஐக்கிய தேசிய கட்சித் தரப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் பலரது பதவிகள் பறிக்கப்படும் வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த போது, ஜனாதிபதி பிரதமருக்கு எதிரான அமைச்சர்களை பதவி விலக்கும் நிலைப்பாட்டினை தவிர்த்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரணிலும் தனக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கு எதிராக மாறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor