சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை: சிவாஜிலிங்கம்

சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண சபையில் நடைபெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடாத்தி, கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது.

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் பேச வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நாள் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம்.

நாடாளுமன்றில் ஒத்திவைத்த பிரேரணை கொண்டு வரலாம். ஆனால் அந்த நேரத்தில் நாடாளுமன்றில் 40 உறுப்பினர்கள் கூட இருப்பார்களே தெரியாது. நாடாளுமன்றில் இந்த பிரச்சனை பேசப்பட்டு தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயாதீன தமிழீழம் மலரவேண்டுமா? சுதந்திர தமிழீழம் மலர வேண்டுமா? என்பதை சிங்கள தலைமைகளே தீர்மானிக்க வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் தொடருமாக இருந்தால் சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிங்கள தலைவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என கூறினார்.

Recommended For You

About the Author: Editor