புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு போக்குவரத்து சபையில் முன்னுரிமை

இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றது. இவற்றுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளும் விண்ணப்பிக்கலாமென, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் விவாதம் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வாய்ப்புக்களை வழஙக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளில் திறமையான சாரதிகள் உள்ளனர். அவர்களை சமூகத்தில் ஒன்றிணைக்கும் பொருட்டு இந்த வெற்றிடங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் கிழக்கில் தற்போது சாரதிக்குரிய வெற்றிடம் 40 , பேருந்து திருத்துநர் 38 , நடத்துனர் வெற்றிடம் 40, ஆகியன உள்ளன. இவைகளுக்கு முன்னாள் போராளிகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க இவ்விடயம் தொடர்பில் கூறுகையில்,

“இனிவரும் காலங்களில் முன்னாள் போராளிகளை கருத்திற்கொண்டு வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அத்துடன் சாரதிகள், நடத்துனர்களுக்கான தகுதி காணப்படுமாக இருந்தால் இலங்கை போக்குவரத்து சபை தலைமை காரியாலயத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும் இவ்வெற்றிடங்களுக்கு 45 வயதுக்கு குறையாதவராகவும் 5 வருடங்கள் வாகனத்துக்கான அனுமதிப்பத்திரம், 8ஆம் தர சித்தி மற்றும் சாதாரண தரத்தில் கணக்கு பாடத்துடன் 6 சித்திகள் காணப்படுமாக இருந்தால் போதுமானதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor