முல்லைத்தீவு கடற்கரையில் அரியவகை இராட்சதப் பறவை: மீனவர்கள் அச்சம்!

முல்லைத்தீவின் ஆழ்கடல் பிரதேசம் வழியாக அரியவகை இராட்சதப் பறவை ஒன்று பறந்து சென்றுள்ளது.

கடற்கரையில் இருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தென்பட்ட இந்த இராட்சதப் பறவை, வட – கிழக்கு கடல் வழியாக ஆழ்கடல் நோக்கிப் பறந்து சென்று மறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் முல்லைத்தீவுப் பெருங்கடலில் ஏற்பட்ட பல்வேறு காலநிலை மாற்றங்களினால் மீனவர்களின் தொழில் மிகவும் பாதிப்படைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்றுப் பறந்து சென்ற இந்த இராட்சதப் பறவை தொடர்பில் மீனவர்கள் மத்தியில், தமக்கு அசாதாரண நிலைமைகள் எதுவும் ஏற்படலாம் என நம்புவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து முல்லைத்தீவுப் பெருங்கடலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் நீங்கி கடல்நிலை சீராக வேண்டும் எனவும், மீனவர்களின் தொழில் மேம்படவேண்டும் என்றும் அண்மையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் ஒன்று கூடி வழிபாடு ஒன்றினை செய்திருந்தனர்.

எனினும் முல்லைத்தீவுப் பெருங்கடல் மீனவர்களின் தொழிலில் தற்பொழுது பாதிப்புக்கள் குறைவடைந்துள்ளதாகவும், குறித்த பறவையின் வருகையால் தாம் மீண்டும் அச்சமடைந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor