தமிழினத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம்!

இன்றைய அரசியல் கலாசாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக உருமாறி வரும் தமிழ் சமூகம் கல்வி அறிவிலும் பின்தங்குவார்களாயின் எமது இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதமர அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”தமிழ் மக்கள் இன்று பலவிதமான சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறானவர்களுக்கு கைக்கொடுக்கும் நிரந்தர ஆயுதம் கல்வி அறிவு ஒன்றே.

இளைஞர்கள் மாத்திரமன்றி மூத்தவர்களும் வெளிநாட்டு மோகத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வெளிநாடு சென்றால் தாங்கள் நிலையான வாழ்வை பெறலாம் என எண்ணுகின்றனர். ஆனால் அவ்வாறு எல்லோருக்கும் அமைவதில்லை. வெளிநாடுகளிலும் பல நிறுவனங்கள் இப்போது மூடப்பட்டு வருகின்றன. இதனால், இங்கிருந்து சென்றவர்கள் மீண்டு நாடு திரும்பும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு வரும் இளைஞர் யுவதிகளுக்குப் போதிய கல்வித்தரம் இருப்பதில்லை.

எனவே அழியாச் செல்வமான கல்விச் செல்வத்தை அனைவரும் பெற வேண்டும். இந்த மாணவச் செல்வங்களுக்கு உதவுவதற்கு பல வகையான உதவுனர்கள் தயார் நிலையில் இருக்கின்றார்கள். எனவே அவர்களின் உதவிகளையும் வழிகாட்டல்களை சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor