தந்தையுடன் சிறைச்சாலைக்கு செல்ல முயற்சித்த மகள் : தாயாரின் இறுதிச் சடங்கில் நெகிழ்ச்சித் தருணம்!

தாயாரின் இறுதிச் சடங்கிற்கு அழைத்துவரப்பட்டிருந்த அரசியல் கைதியான தனது தந்தையுடன் சிறைச்சாலைக்கு செல்ல மகள் முயற்சித்தமையானது அனைவரது மனதையும் நெகிழவைத்துள்ளது.

சுகயீனம் காரணமாக கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்த ஆனந்தசுதாகர் யோகராணியின் இறுதிச் சடங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மருதநகரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் மனையிவியின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்வதற்காக   சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர் பொலிஸாரினால் அழைத்துவரப்பட்டார்.

கிரியை நிறைவடைந்த பின்னர் தனது தந்தையை சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லும் போதே அவரது மகளும் பேரூந்தில் ஏற முயற்சித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட ஆனந்த சுதாகருக்கு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்போது ஒப்புதல் வாக்கு மூலத்தின் பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக கடும் சுகவீனமுற்ற ஆனந்த சுதாகரின் மனைவி உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு ஆனந்தசுதாகரிற்கு 3 மணித்தியாளங்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

பின்னணி 

2007 ஆம் ஆண்டு பிலியந்தலையில் நடந்த  தாக்குதலுக்கு உதவியாக இருந்தார், திட்டங்களை வகுத்தார், வெடிபொருட்களை நகர்த்தினார் என்றும், விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் 10 வருடத்திற்கும் அதிக காலம் அங்கம் வகித்தார் என்றும், இன்னும் பல பயங்கரவாத குற்றச் செயல்களின் கீழும் சந்தேக நபராக தேடப்பட்ட ஆனந்த சுதாகரன் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட தருணத்தில் ஆனந்த சுதாகரன் வயது 27 நிரம்பியவராகவும், இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருந்தார்.

 

மனைவியான யோகராணி ஆனந்த சுதாகரன் (36 வயது) உடல் நலக் குறைவால் கடந்த 15 ஆம் திகதி காலமானார். சாதாரண ஆஸ்துமா நோயாளியான அவர் தனது கணவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பின்னர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிக யோசனை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் மிக அதிகமாக பாதிப்படைந்தார். அதன்தாக்கமே அவரை மரணம் வரை கொண்டு சென்றது.

மரண சடங்குகள் முடிந்த பின்னர் மூத்த மகன் மயானத்திற்கு கொள்ளி வைப்பதற்காக சென்ற வேளை அரசியல் கைதியான சுதாகரன் மீண்டும் சிறைக்கு திரும்பவதற்காக சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார். அவ்வேளை, யாரும் சற்று எதிர்பார்க்காத விதமாக அவரது 10 வயது நிரம்பிய மகளும் சிறைச்சாலை வாகனத்திற்குள் ஏறிவிட்டார்.

தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது. பலரது மனங்களை இந்த சம்பவம் நொருக்கிவிட்டது. வலுக்கட்டாயமாக மகளை சிறைச்சாலை அதிகாரிகள் பிடித்து கீழிறக்கும் போது ஒன்றுமே அறியாத அந்த குழந்தை தன் தந்தையை பார்த்து “அப்பா நாளை மறுதினம் மீண்டும் வருவீர்களா அப்பா” என சுதாகரிடம் கேட்டது கொடுமையின் உச்சகட்ட நிமிடமாக உணரப்பட்டது.

இவருடைய வழக்குக்கான தாய் சுமதி சொத்துக்களை விற்று வாதாடி வந்த நிலையில் தற்போது காலமாகி உள்ளார்.

Recommended For You

About the Author: Editor