வன்முறைகளுக்கெதிராக வடக்கில் கடையடைப்பு!

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கில் கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பெரும்பாலான தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் அதிக அளவில் மூடப்பட்டுள்ளன.

மன்னாரில் உள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம்பெற்று வருவதோடு, பாடசாலைகள் மற்றும் அரச தனியார் திணைக்களங்களின் செயற்பாடுகளும் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், அசம்பாவிதச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து வவுனியாவிலும் முஸ்லிம் வர்த்தகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பவும், இனிவரும் காலங்களில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்வதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துமே வர்த்தக நிலையங்களை மூடியுள்ளதாக முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வவுனியா பெரிய பள்ளிவாசலில் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் நகர்ப்புரத்தில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பார்வையிட்டதுடன் எவ்வித அசம்பாவிதங்களும் வவுனியாவில் எற்படாத வகையில் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.

இதேபோல் யாழ்ப்பாணத்திலும் தமது வர்த்தக நிலையங்களை மூடி குறித்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகத் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor