ஐ.நா.வில் பெரும் நெருக்கடி காத்திருக்கிறது!: மாவை

இலங்கையில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களின் தாக்கம் ஐ.நா.வில் எதிரொலிக்கும் என்றும், ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி காத்திருக்கின்றது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மதுவரி திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்ட மாவை, இச்சம்பவங்களின் பின்னணியில் பௌத்த பிக்குகளே உள்ளனர் எனக் குற்றஞ்சாட்டினார்.

போரினால் பலவற்றை இழந்த தமிழினத்திற்கு அதன் வலி தெரியும். அந்தவகையில் இனத்தால் வேறுபட்டிருந்தாலும், மொழியால் ஒன்றுபட்ட தமிழர்களும் முஸ்லிம்களும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றுபட்டே நிற்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் பிரச்சினைகள் வலுப்பெறும் என்றும், இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் மாவை கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, ஜனாதிபதியும் பிரதமரும் பிரிந்து நிற்பதானது நல்லாட்சியின் ஆயுளை சந்தேகிக்க வைக்கின்றதென்றும், தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரு தலைவர்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.

Recommended For You

About the Author: Editor