ஈபிடிபியின் அறிக்கைக்கு சட்டத்தரணி சுகாஸ் பதிலறிக்கை!!

2013ஆம் ஆண்டு வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியாதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அவர் மீதான அந்தத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினருமே நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அன்று எம்மீது குற்றம் சுமத்தியதுடன், சில தமிழ் ஊடகங்களும் அவ்வாறே செய்தியும் வெளியிட்டிருந்தன.

அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று உண்மை வெளியாகியுள்ள நிலையில் ஈ.பி.டி.பி மீது அன்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது என்பது உறுதிசெய்யப்பட்டு ஈ.பி.டி.பியை வரலாறு விடுதலை செய்துள்ளது என்று அந்தக் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது.

அத்துடன், மேற்படி சம்பவம் தொடர்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் தற்போதைய அந்தக் கட்சியின் பேச்சாளருமான சட்டத்தரணி சுகாஸ் ஈ.பி.டி.பி மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவதூறுகளை பரப்பி வந்திருந்தார்.

2013ஆண்டுக்கான இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கையில் அந்தச் சம்பவத்தை ஈ.பி.டி.பியினரே செய்ததாகவும், அந்தத் தாக்குதல் நடைபெற்றபோது நேரடியாகக் கண்டதாகவும் சட்டத்தரணி சுகாஸ் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஈபிடிபியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஈபிடிபியின் இந்த அறிக்கை தொடர்பில் சட்டத்தரணி சுகாஷ் பதிலறிக்கை ஒன்றை இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

என்னைப்பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதனால் இந்த ஊடக அறிக்கையை வெளியிடுகின்றேன்.

2013ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் காலப்பகுதியில் “சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின்” சட்ட ஆலோசகராக கடமையாற்றியிருந்தேன். 2013 செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி நள்ளிரவு திருமதி அனந்தி சசிதரனின் வீட்டைச் சூழ இராணுவப் புலனாய்வாளர்களும் ஆயுதம் தரித்த நபர்களும் நிற்பதாகவும் அவரைப்பாதுகாப்பதற்காக என்னை உடனடியாக அங்கு வருமாறும் முறைப்பாடு கிடைத்தது.

நள்ளிரவு 12 மணியளவில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தும் எனது கடமையைச்செய்வதற்காக திருமதி அனந்தி சசிதரனின் வீட்டிற்குச் சென்றேன்.

அங்கு எங்களை சூழ்ந்துகொண்ட இராணுவ சீருடை தரித்த ஆயுததாரிகளும் ஈபிடிபி ஒட்டுக்குழுவை சேர்ந்த சிலரும் என்னையும் அங்கிருந்த அனந்தியின் ஆதரவாளர்களையும் தாக்கி வெறியாட்டம் போட்டனர். அதனால் நாங்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை ஊரறிந்த உண்மை. இதை இப்போது ஈபிடிபி மறுக்க முற்படுவது முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பதை போன்றது.

நான் எந்த மேடையிலும் உண்மையையே பேசுகின்றேன். அது ஐக்கிய நாடுகள் சபை மேடையாக இருக்கலாம் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேடையாக இருக்கலாம். காரணமின்றி ஈபிடிபி மீது குற்றஞ்சுமத்தவில்லை என்பதை பொறுப்போடு கூறுகின்றேன். அவர்கள் செய்ததையே கூறுகின்றேன்.

நான் அவர்களைப்பற்றி உண்மைக்கு மாறானவற்றை கூறுவதாக அவர்கள் கருதினால் தாராளமாக என்மீது மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யலாம்.அவ்வாறு அவர்கள் வழக்குத்தாக்கல் அதை முறைப்படி எதிர்கொண்டு அவர்களுக்கு மானம் இல்லாத காரணத்தால் நஷ்டம் ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க தயாராகவே உள்ளேன்.

நீங்கள் உத்தமர்கள்போல் அறிக்கை விட்டால் மட்டும் நீங்கள் செய்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கல்கள், வன்புணர்வுகள், காட்டிக்கொடுப்புக்களை தமிழ்மக்கள் மறந்துவிடுவர் என்று நினைத்தால் அது உங்கள் அறிவீனமே! முட்டாள்தனமே!!!

உங்களைப்போல் பதவிகளுக்காகவும் அதிகாரத்துக்காகவும் அங்கலாய்த்து பொய்யுரைப்பவன் நானல்ல.நான் கண்ட உண்மையை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தேன்இனியும் வெளிப்படுத்துவேன்.

டக்ளஸ் தேவானந்தா அவர்களே, முடிந்தால் இதுபற்றி ஒரு பகிரங்க விவாதம் வைப்போம். வந்து மோதிப்பாருங்கள். மக்களுக்கு யாரின் கைகள் கறைபடிந்ததவை என்பது அப்போது புலப்படும்.
எத்தடை வந்தாலும் தமிழ்த் தேசியத்துக்கான என் பணி தொடரும்.

ஆயுதங்களுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் அஞ்சுபவன் நானல்ல. அப்படி அஞ்சியிருந்தால் அன்று துப்பாக்கி முனையில் உங்கள் ஒட்டுக்குழுவினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் என்னை தாக்கி அச்சுறுத்தியதோடு வீட்டுக்குள் முடங்கியிருப்பேன். உங்கள் ஆயுதத்துக்கே அஞ்சாத நான் ஒருபோதும் உங்கள் அப்பட்டமான பொய்யான ஊடக அறிக்கைக்கு அஞ்சேன்

உண்மைக்காகவும் நீதிக்காவும் தமிழ்த்தேசியத்திற்காகவும் என் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். , என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor