யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார் -கஜேந்திரகுமார்

யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் யாழ். மாநகர சபை உள்ளிட்ட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர் இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“யாழ் மாநகர சபையில் ஆட்சி அமைக்கும் போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் அதிக உறுப்பினர்கள் மணிவண்ணனை தெரிவு செய்வார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களில் கணிசமானவர்கள் மணிவன்னணை மேயராக தெரிவதற்கு வாக்களிப்பார்கள். இதில் சந்தேகம் இல்லை.இந்த இரகசிய வாக்கெடுப்பில் வேறு யாரும் கூடுதலான வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் மேயராக தெரிவுசெய்யப்பட்டால் அவர் நிர்வாகத்தை நடத்த முடியும். அவ்விடயத்தில் நாங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வோம். நாங்கள் விரும்பாத பகுதியைச் சேர்ந்தவர் நிர்வாகத்தை அமைத்தால் நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்தப் போவதில்லை.


ஆனால், அந்த சபையில் மக்களுடைய நலனுக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அந்த விடயத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். அதற்கு தயங்க மாட்டோம். இரகசிய வாக்களிப்பு தொடர்பில், அல்லது ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் வேறு எந்த கட்சியுடனும் பேசவில்லை. அப்படியான பேச்சுக்களை நடத்தப் போவதும் இல்லை.


ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் எம்முடன் இது தொடர்பில் பேசியுள்ளார்கள். எமது வேட்பாளருக்கு ஆதரவு தர விருப்பம் தெரிவித்துள்ளார்கள். வேறு கட்சிகளின் தனி நபர்களும் எங்களுடன் பேசியுள்ளார்கள். இதனடிப்படையிலேயே ஆட்சியமைப்பது தொடர்பில நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.


உள்ளூராட்சி சபைகளில் தலைமை வகிக்கும் நபர்கள் யார் என்பது முக்கியம் இல்லை.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாநகர முதன்மை வேட்பாளர் இமானுவேல் ஆர்னோல்ட் பல இடங்களில் மதவாதத்தை கையில் எடுத்து, தான் ஒரு கிறிஸ்தவர் என்றதால் தமிழ் தேசிய பேரவை தன்னை எதிர்ப்பதாக வழமை போன்று அப்பட்டமான பொய்யை சொல்லி வருகின்றார்.


இதே போன்று நல்லூர் பிரதேச சபை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகள் உட்பட குறைந்த பட்சம் ஐந்து சபைகளில் தமிழ் தேசிய பேரவை ஆட்சியமைக்கும்” என்றார்

Recommended For You

About the Author: Chief Editor