யாழில் ஆட்சிபீடமேறுகிறது தமிழரசுக் கட்சி: மேயராக ஆர்னோல்ட்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட ஆர்னோல்ட், அதில் வெற்றிபெற்று மாகாண சபைக்கு தெரிவானார். கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி வடக்கு மாகாண சபை உறுப்பினராக பதவியேற்ற ஆர்னோல்ட், மாகாண விளையாட்டு அபிவிருத்தி மற்றும் நிறுவன ஊக்குவிப்பு தொடர்பில் கண்காணிப்பதற்காக முதலமைச்சரால் நியமிக்கப்பட்டார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor