கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வு என்ன?- சுரேஸ்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மந்தமான வெற்றியை பதிவுசெய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வு என்ன?, என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக விளங்கிவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பலவீனப்பட்டிருக்கிறது.

மக்கள் இம்முறை மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள். முன்னர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய தமிழ்தேசிய கூட்டமைப்பு இம்முறை பலத்த பின்னடைவினை சந்தித்துள்ளது. வெருகல, பூநகரி போன்ற இடங்களை தவிர்த்து சகல இடங்களிலும் பெரும்பான்மையினை இழந்துள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவிலான அணி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதனால் தெற்கில் ஆட்சி மாறுமா? என்னும் அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கிறது. இந்நிலையில் இப்படியான மாற்றம் வந்தால் என்ன செய்வதென தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் திட்டம் ஒன்றிருந்திருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும்.

அதனடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு என்ன? என்பது தொடர்பில் தெளிவான தீர்மானத்தை எடுக்கவேண்டும். இதற்கு தமிழரசு கட்சியிடம் கொள்கை மற்றும் உபாய மாற்றம் வேண்டும். இதனைவிடுத்து இரா.சம்பந்தனும், சுமந்திரனும் வாயால் கருத்துக்களை கூறிக்கொண்டிருப்பதால் எவ்வித பயனுமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor