தலைமைகள் நீக்கப்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறார் கஜேந்திரகுமார்

தமிழினம் நடுத்தெருவில் நிற்கக் காரணமாகவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பக்கமே நிற்கின்றனர். அதனால் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் மோசடிகளையும், நம்பிக்கைத் துரோகத்தையும் எடுத்து கூறினோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே. அந்த விமர்சனங்கள் சில வேளைகளில் கடுமையாக இருந்திருக்கலாம். ஆனால் ஒற்றையாட்சிக்கும் பௌத்தத்தின் முன்னுரிமைக்கும் இணங்கியமையாலே அவ்வாறு விமர்சனங்கள் அமைந்தன.

தமிழ் தேசியப் பேரவை இந்த மாற்றத்திற்குப் பெரும் அடித்தளமாக அமைந்துள்ளது. நாம் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழினம் நடுத்தெருவில் நிற்கத் தலமைத்துவம் வழங்கியவர்கள் நீக்கப்பட்டு நல்லதொரு தலைமைத்துவம் அமைந்தால் ஒருமித்துச் செல்வோம்.

கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் தேசியத்துடன் ஊழலற்று இயங்க விரும்புவோர் எம்முடன் இணைந்து தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor